கட்டுரை

டெல்லி தேர்தல்: மீண்டும் ஆம் ஆத்மியா?

மதிமலர்

டெல்லியில் அரசியல் செய்யும் விதத்தை நாங்கள் மாற்றி உள்ளோம். ஹரியானாவில் ஜாட் அரசியல், குஜராத்தில் படேல்& படேல் அல்லாதோர் அரசியல், மராட்டியத்தில் மராத்தி &மராத்தி பேசாதோர், பிற மாநிலங்களில் இந்து  &முஸ்லிம் என்று அரசியல் செய்யும் பாஜக, டெல்லியில் என்ன அரசியல் பேசுகிறது தெரியுமா?

மின்சாரம், தண்ணீர், பள்ளி, மருத்துவமனை பற்றி. அரசியல் இங்கே செயல்பாடுகளைக் குறித்த

பேச்சாக மாறிவிட்டது. சாதியும் மதமும்தான் அரசியலாக இருக்கும் நாட்டில் இம்மாற்றத்துக்குக் காரணம் நாங்கள்தான்'' &பெருமையுடன்

சொல்லிக்கொள்கிறார், அரவிந்த் கெஜ்ரிவால். ஆம் ஆத்மி கட்சித்தலைவர் டெல்லி முதல் அமைச்சர். ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் மூலமாக ஆட்சிக்கு வந்தவர். டெல்லியில்  பலம்வாய்ந்த காங்கிரசையும் பாஜகவையும் எதிர்த்து அரசியல் செய்பவர்.

அவர் தேர்தல் ஆணையத்துக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்தபோது வழியெங்கும் தொண்டர்கள் குவிந்துவிட்டனர். இந்த நெருக்கடியில் ஆணையம் செல்ல நேரம் ஆகிவிட்டது. இவர்களை விட்டுவிட்டு நான் செல்ல முடியாது. நாளைக்கு கடைசி நாள். நாளையே வேட்பு மனு தாக்கல் செய்துகொள்கிறேன் என்று சொல்லிவிட்டார், கெஜ்ரிவால். மறுநாள் போனபோது அவருக்கு கொடுக்கப்பட்ட டோக்கன் எண் 36. ஆறுமணி நேரம் காத்திருந்து வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்.

மின்சாரக் கட்டணக் குறைப்பு, இலவச குடி

நீர், தெருவோர மருத்துவமனைகள், மகளிருக்கு பஸ் கட்டணம் ரத்து என்று இவர் கடந்த ஐந்தாண்டுகளில் சொல்லி அடித்த சேவைகள் பொதுமக்களைக் கவர்ந்துள்ளன. ‘‘ மாதம் 5000 ரூபாய் வரை இதனால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மிச்சமாகிறது. ஆண்டுக்கு 60,000 ரூபாய்'' என்று  சொல்கிறார், ஆம் ஆத்மி தலைவர் ஒருவர். வரிவிதிப்பிலும் வரி வரம்புகளைக் குறைத்தது ஆம் ஆத்மி அரசு. இதனால் முந்தைய ஷீலா தீட்சித்தின் காங்கிரஸ் அரசில் வரி வசூல்  30000 கோடியாக இருந்தது இப்போது 60000 கோடியாக உயர்ந்துள்ளது. குறைவான வரி விதிப்பு, வரிகட்டுவோரை அதிகப்படுத்திஉள்ளது என்பது கவனத்துடன் பார்க்கப்படுகிறது. பெரிய பெரிய காண்ட்ராக்ட்களில் ஊழல் என்பதுதான் இந்திய மாநிலங்களின் பெரிய பிரச்னை. டெல்லி முதல்வர் இதை முழுமையாக ஒழித்துவிட்டார். உதாரணத்துக்கு 350 கோடி திட்ட மதிப்பிடப்பட்ட பாலம் 250 கோடியில் கட்டப்படுகிறது. முன்பென்றால் இது ஆயிரம் கோடியில் போய் முடிந்திருக்கும்.

யமுனையை சுத்தம் செய்வது, டெல்லியை மேலும் நவீனமயமாக்குவது முக்கியமாக காற்று

மாசில் இருந்து நகரைக்காப்பது ஆகியவற்றில் அடுத்த ஐந்தாண்டில் கவனம் செலுத்துவோம் என்று சொல்கிறார் இவர்.

டெல்லி அரசு நடத்தும் பள்ளிகளில் மாறுதல்களைக் கொண்டு வந்திருப்பது முக்கியமான விஷயம். அழகான கட்டடங்கள், ஸ்மார்ட் கிளாஸ்கள், சிசிடிவிகள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகம், மதிய உணவு, மகிழ்ச்சிக்காகவே ஒரு பாடவேளை அறிமுகம் என பள்ளிகள் ஜொலிக்கின்றன. ஒரு பள்ளியில் நீச்சல் குளம் கூட இருக்கிறது. தனியார் பள்ளிகளுடன் போட்டி போடும் வகையில் அரசுப் பள்ளிகளை மாற்றி இருப்பது, அடித்தட்டு மக்களை ஆம் ஆத்மி கட்சி சார்பாக ஈர்த்திருப்பதாகச்

சொல்கிறார்கள். கடந்த தேர்தலில் இம்மாநிலத்தில் உள்ள 12 ரிசர்வ் தொகுதிகளிலும் ஆம் ஆத்மிதான் வென்றது. இம்முறையும் அதையே நடத்திக்காட்ட அக்கட்சி விரும்புகிறது.

அரசு நிர்வாகத்தில் இவ்வளவு மாறுதல்களையும் இவர் செய்தாலும் டெல்லி மத்திய அரசின் நேரடி ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசமாக இருப்பதால் முதல்வருக்குண்டான அதிகாரங்கள் குறைவு. எல்லா கோப்புகளும் துணை ஆளுநர் அதாவது பாஜகவால் நியமிக்கப்பட்டவரின் ஒப்புதலைப் பெறவேண்டும். சிசிடிவி பொருத்துதல் தொடர்பான ஒரு கோப்புக்கு ஒப்புதல் பெற கெஜ்ரிவால் கடநத ஆண்டு பத்து நாட்கள் மறியலில் ஈடுபட வேண்டி இருந்தது. இரண்டு ஆண்டுகளாக ஆளுநர் அதில் கையெழுத்திடவில்லை. பத்துநாட்களாக அவர் வீட்டில் மறியலில் அமர்ந்து அவர் கையெழுத்துப்போட்ட பின்னரே அங்கிருந்து கிளம்பினார். பல அரசு அதிகாரிகளை மத்திய பாஜகதான் நியமிக்கும். இவரால் ட்ரான்ஸ்பர் செய்யமுடியாது. ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியாது. உச்சநீதிமன்றம் போய் போராடித்தான் சில அதிகாரங்களை இவர் பெற்றிருக்கிறார். தனது எதிர்க்கட்சியான பாஜக மத்தியில் அமர்ந்துகொண்டு தன்னைச் செயல்படவிடாமல் செய்கிறது என்பதை ஒவ்வொரு முறையும் சுட்டிக்காட்டியே வந்திருக்கிறார். ஆனால் என்ன ஆனாலும் தெருவில் இறங்கிப் போராடுவதற்கு அவர் தயங்கியதே இல்லை!

இவர் மீது 33 வழக்குகள் போடப்பட்டுள்ளன. இவரது எம்.எல்.ஏக்கள் 20 பேர் மீது வழக்குகள் உள்ளன. இவர் வீட்டின் படுக்கையறை வரை போய் போலீஸ் ரெய்டு செய்தது. எல்லாம் பாஜகவின் திட்டம் என்றும் எவ்வளவோ மிரட்டினாலும் நாங்கள் பணியவே இல்லை, எந்த வழக்கும்

நீதிமன்றத்தில் நிற்கவே இல்லை எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் சொல்கிறார்.

இந்த பிப்ரவரி மாதம் நடக்க இருக்கும் தேர்தலைப் பொருத்தவரை, டெல்லி மாநில அரசியலில் கெஜ்ரிவாலுக்கு எதிராக வைக்கக் கூடிய வலுவான முகம் பாஜகவிலும் இல்லை; காங்கிரசிலும் இல்லை. மோடி&ஷா முகங்கள் தேசிய அளவிலானவை. காங்கிரஸில் டெல்லிக்கு ஷீலா தீட்சித் அளவுக்கு நம்பிக்கையான முகம் என்று யாரையும் வைக்க முடியவில்லை!

அர்விந்த் கெஜ்ரிவால் பல ஆண்டுகளாக நரேந்திரமோடியை மிகக்கடுமையாக நேரடியாக விமர்சித்து வந்தவர். இந்த தேர்தலில் அவர் வேறு உத்தியைக் கடைப்பிடிக்கிறார். நேரடியாக மோடியுடன் சண்டை பிடிப்பதில்லை. அவரை விமர்சிப்பதே கிடையாது. குடியுரிமை

சட்டத் திருத்தம், அரசியல் சாசனச் சட்டம் 370 போன்ற பிரச்னைகளில் அவர் மென்மையான போக்கைக் கடைப்பிடிக்கிறார். இடதுசாரிக் கொள்கை சார்பாளராகவும் தன்னைக் காட்டிக் கொள்வது இல்லை. ‘‘ஜே.என்யூ மாணவர்கள் தாக்கப்பட்ட அன்று அவர் அங்கே நேரில்

சென்று பார்க்காததும்கூட ஓர் அரசியலுக்காகத்தான்,'' என்கிறார் ஒரு விமர்சகர்.

ஆனால் ஆம் ஆத்மி கட்சியினர் ஒன்றும் பெரிதாகச் செய்துவிடவில்லை; எல்லாம் விளம்பரம் செய்துகொள்வதில் மட்டும் கவனம் செலுத்துகின்றனர் என பாஜகவினர்

விமர்சிக்கின்றனர்.

ஒரு முதல்வர் தெளிவானவராக இருந்தால், மேல் மட்டத்திலிருந்து ஊழல் ஒழிப்பை, நிர்வாக சீரமைப்பைத்தர முடியும் என்பதற்கு கெஜ்ரிவால்தான் எடுத்துக்காட்டு. அவர் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்னைகள் கொஞ்சமல்ல. இந்த பின்னணியில்தான் சிறந்த நிர்வாகத்தை அளிப்பதில் சாதித்திருக்கிறார் இவர்.

சிறந்த நிர்வாகம் மட்டுமே மீண்டும் ஆட்சியில் அமர்வதற்குப் போதுமா என்பதற்கான பதிலை இந்த தேர்தலில் டெல்லி வாக்காளர்கள் அளிப்பார்கள்!

பிப்ரவரி, 2020.